|
அத்தியாயம்-15
ஸ_ரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
15:1. அலிஃப், லாம், றா. (நபியே!) இவை
வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான
வசனங்களாகும்.
15:2. தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க
வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்)
ஆசைப்படுவார்கள்.
15:3. (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக்
கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க
அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான
ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப்
பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்)
அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
15:4. எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய
பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட
காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.
15:5. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு
முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக்
கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்
என்றும் கூறுகின்றனர்.
15:7. ''நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின்
நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு
வந்திருக்க வேண்டாமா?"" (என்றும் கூறுகின்றனர்.)
15:8. நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு
அல்லாமல் இறக்குவதில்லை அப்(படி இறக்கப்படும்)
போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம்
கொடுக்கப்பட மாட்டார்கள்.
15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்)
இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்;
நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும்
இருக்கின்றோம்.
15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால்
முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை)
அனுப்பிவைத்தோம்.
15:11. எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத்
தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம்
செய்யாமல் இருந்ததில்லை.
15:12. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில்
இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
15:13. அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான்
கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு
முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில்
அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
15:14. இவர்களுக்காக நாம் வசனத்திலிருந்து ஒரு
வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள்
முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள்
ஈமான் கொள்ள மாட்டார்கள்).
15:15. ''நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு
விட்டன இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு
கூட்டமாகி விட்டோம்'' என்று நிச்சயமாகக்
கூறுவார்கள்.
15:16. வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை
நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை
அலங்காரமாகவும் ஆக்கினோம்.
15:17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும்
நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
15:18. திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும்
ஷைத்தானைத்தவிர (அப்போது) பிரகாசமான தீப்பந்தம்
அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா)
மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும்
அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்.
15:20. நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு
உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும்
வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
15:21. ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள்
நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு
குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல்
இறக்கிவைப்பதில்லை.
15:22. இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக
நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து
நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம்
புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து
வைப்பவர்களும் இல்லை.
15:23. நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம்,
நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும்,
எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே
இருக்கின்றோம்.
15:24. உங்களில் முந்தியவர்களையும் நாம்
நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம்
நிச்சயமாக அறிவோம்.
15:25. நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்)
அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம்
மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால்
மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
15:27. (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல
பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம்
படைத்தோம்.
15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்;
''ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை
நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்"" என்றும்,
15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில்
என் ஆவியிலிருந்து ஊதியதும், ''அவருக்கு சிரம்
பணியுங்கள்"" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
15:30. அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் -
சிரம் பணிந்தார்கள்.
15:31. இப்லீஸைத்தவிர - அவன் சிரம்
பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும்
விலகிக்கொண்டான்.
15:32. ''இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும்
சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?""
என்று (இறைவன்) கேட்டான்.
15:33. அதற்கு இப்லீஸ், ''ஓசை தரும் கருப்பான
களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு)
மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!"" என்று
கூறினான்.
15:34. ''அவ்வாறாயின், நீ இங்கிருந்து
வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக
இருக்கிறாய்.""
15:35. ''மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு
நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!"" என்று (இறைவனும்)
கூறினான்.
15:36. ''என்னுடைய இறைவனே! இறந்தவர்கள்
எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம்
கொடுப்பாயாக!"" என்று இப்லீஸ் கூறினான்.
15:37. ''நிச்சயமாக, நீ அவகாசம்
அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;""
15:38. ''குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும்
வரையில்"" என்று அல்லாஹ் கூறினான்.
15:39. (அதற்கு இப்லீஸ்,) ''என் இறைவனே! என்னை
நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில்
(வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு
அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக)
அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
15:40. ''அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள்
பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர"" என்று
கூறினான்.
15:41. (அதற்கு இறைவன் ''அந்தரங்க சுத்தியுள்ள
என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய)
நேரான வழியாகும்.
15:42. ''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு
எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி
வழிகெட்டவர்களைத் தவிர"" என்று கூறினான்.
15:43. நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்)
அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள்
ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்)
பிரிவினருக்கு உரியதாகும்.
15:45. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள்
சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று)
இருப்பார்கள்.
15:46. (அவர்களை நோக்கி) ''சாந்தியுடனும்,
அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்""
(என்று கூறப்படும்).
15:47. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து
குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்)
சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி
அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
15:48. அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும்
ஏற்படாது அவற்றிலிருந்து அவர்கள்
வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
15:49. (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக
''நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க
அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.""
15:50. ''(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும்
நோவினைமிக்கதாகவே இருக்கும்"" (என்றும் சொல்லும்).
15:51. இன்னும், இப்றாஹீமின் விருந்தினர்களைப்
பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
15:52. அவர்கள் அவரிடம் வந்து, ''உங்களுக்குச்
சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!"" என்று சொன்ன போது
அவர், ''நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்""
என்று கூறினார்.
15:53. அதற்கு அவர்கள், ''பயப்படாதீர்! நாம்
உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி
நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்""
என்று கூறினார்கள்.
15:54. அதற்கவர், ''என்னை முதுமை
வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங்
கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள்
நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி
எதைப்பற்றியது?"" எனக் கேட்டார்.
15:55. அதற்கவர்கள், ''மெய்யாகவே, நாங்கள் உமக்கு
நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி)
நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!"" என்று
கூறினார்கள்.
15:56. ''வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம்
இறைவனுடைய அருளைப்பற்றி நிராசைக் கொள்வர்"" என்று
(இப்ராஹீம் பதில்) சொன்னார்,
15:57. ''(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய
காரியமென்ன?"" என்று (இப்றாஹீம்) கேட்டார்.
15:58. அதற்கவர்கள், ''குற்றவாளிகளான ஒரு
கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
15:59. ''லூத்தின் கிளையாரைத் தவிர,
அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
15:60. ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர -
நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு)
பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து
விட்டோம்"" என்று (வானவர்கள்) கூறினார்கள்.
15:61. (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய
கிளையாரிடம் வந்த போது.
15:62. (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத
மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்"" என்று (லூத்)
சொன்னார்,
15:63. (அதற்கு அவர்கள்,) ''அல்ல, (உம்
கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ,
அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
15:64. (உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே
உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்;
நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய
குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்;
அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு)
அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும்.
உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்.
நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள்
என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
15:66. மேலும், 'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே
நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்)
அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு
அறிவித்தோம்".
15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள்
வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க
மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
15:68. (லூத் வந்தவர்களை நோக்கி;) ''நிச்சயமாக
இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள்
முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;""
15:69. ''அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக்
கேவலப்படுத்தி விடாதீர்கள்"" என்றும் கூறினார்.
15:70. அதற்கவர்கள், ''உலக மக்களைப்
பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்)
நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?"" என்று
கேட்டார்கள்.
15:71. அதற்கவர், ''இதோ! என் புதல்வியர்
இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர
வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து
கொள்ளலாம்"" என்று கூறினார்.
15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக,
நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து
கொண்டிருந்தார்கள்.
15:73. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை
பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
15:74 பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப்
புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல்
சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
15:75. நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப்
பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
15:76. நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்)
வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.
15:77. திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த)
அத்தாட்சி இருக்கிறது.
15:78. இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த
(ஷ{ஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக
இருந்தனர்.
15:79. எனவே அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த)
இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து)
வழியில் தான் இருக்கின்றன.
15:80. (இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை
வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக்
கொண்டிருந்தனர்.
15:81. அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக்
கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப்
புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
15:82. அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம்
எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை
அமைத்துக் கொண்டார்கள்.
15:83. ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி
முழக்கம் பிடித்துக் கொண்டது,
15:84. அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென)
அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு
பலனும் அளிக்கவில்லை.
15:85. நாம் வானங்களையும், பூமியையும், இவை
இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே
அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய
தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது
ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப்
புறக்கணித்துவிடும்.
15:86. நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்)
படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும்
இருக்கின்றான்.
15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத்
திரும்ப ஓதக் கூடிய (ஸ{ரத்துல் ஃபாத்திஹாவின்)
ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும்
வழங்கியிருக்கின்றோம்.
15:88. அவர்களிலிருந்து, சில வகுப்பினரை
இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம்
செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது
கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர்
துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்)
இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
15:89. ''பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக
நிச்சயமாக நான் இருக்கின்றேன்"" என்று நீர்
கூறுவீராக
15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப்
பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை)
இறக்கியவாறே,
15:91. இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும்
(வேதனையை இறக்கி வைப்போம்).
15:92. உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம்
அவர்களனைவரையும் விசாரிப்போம்.
15:93. அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்)
செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
15:94. ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை
வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து
வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
15:95. உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே
உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
15:96. இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன்
வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்;
(இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:97. (நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம்
நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம்
அறிவோம்.
15:98. நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம்
இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸ{ஜூது செய்(து
சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை
வணங்குவீராக!
|