|
அத்தியாயம்-37
ஸ_ரத்து ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது
சத்தியமாக,
37:4. நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
37:5. வானங்களுக்கும், பூமிக்கும்,
இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே)
இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
37:6. நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக
இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்
கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
37:7. (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும்
தடையாகவும் (ஆக்கினோம்).
37:8. (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார்
(பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும்,
அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி
எறியப்படுகிறார்கள்.
37:9. (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்;
அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
37:10. (ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல
முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச
தீப்பந்தம் பின்தொடரும்.
37:11. ஆகவே, ''படைப்பால் அவர்கள் வலியவர்களா
அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி
போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!)
நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப்
பிசுபிசுப்பன களிமண்ணால்தான்
படைத்திருக்கின்றோம்.
37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு)
நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள்
பரிகாசம் செய்கின்றனர்.
37:13. அன்றியும், அவர்களுக்கு
நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள்
நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
37:14. அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக்
கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
37:15. ''இது பகிரங்கமான சூனியமேயன்றி
வேறில்லை"" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
37:16. ''நாங்கள் இறந்து, மண்ணாகவும்
எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும்,
மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து)
எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
37:17. ''அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா?
(எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
37:18. ''ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக)
நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும்
எழுப்பப்படு)வீர்கள்"" என்று (நபியே!) நீர்
கூறும்.
37:19. ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள்
(திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
37:20. (அவ்வேளை) ''எங்களுடைய கேடே! இது கூலி
கொடுக்கும் நாளாயிற்றே"" என்று அவர்கள் கூறுவர்.
37:21. ''நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக்
கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள்
இதுதான்!"" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)
37:22. ''அநியாயம் செய்தார்களே அவர்களையும்
அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக்
கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
37:23. ''அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை
அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு
கொண்டு செல்லுங்கள்.
37:24. ''இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி
வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி
கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்"" (என்று
மலக்குகளுக்குக் கூறப்படும்)
37:25. ''உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள்
ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று)
உதவி செய்து கொள்ளவில்லை?"" (என்று
கேட்கப்படும்).
37:26. ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய
இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக
இருப்பார்கள்.
37:27. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி,
ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்)
கொண்டும் இருப்பார்கள்.
37:28. (தம் தலைவர்களை நோக்கி) ''நிச்சயமாக
நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்)
எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்"" என்று
கூறுவார்கள்.
37:29. (''அப்படியல்ல!) நீங்கள் தாம்
முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் -
இருக்கவில்லை!"" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
37:30. ''அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு
எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள்
தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக
இருந்தீர்கள்.""
37:31. ''ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு
எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம்
(யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
37:32. ''(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்;
நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.""
37:33. ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள்
வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
37:34. குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம்
நிச்சயமாக நடத்துவோம்.
37:35. ''அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை"" என்று
அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள்
பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
37:36. ''ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக
நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு
விடுகிறவர்களா?"" என்றும் அவர்கள்
கூறுகிறார்கள்.
37:37. அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு
வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர்
வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
37:38. (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக
நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள்
தாம்.
37:39. ஆனால், நீங்கள் செய்து
கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும்
நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
37:40. அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான
அடியார்களோ (எனின்)-
37:41. அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு
அவர்களுக்கு இருக்கிறது.
37:42. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும்
அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
37:43. இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:44. ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு
கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:45. தெளிவான பானம் நிறைந்த குவளைகள்
அவர்களசை; சுற்றி கொண்டுவரும்.
37:46. (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு
மதுரமானது.
37:47. அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள்
புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
37:48. இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான
பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர
கன்னியரும்) இருப்பார்கள்.
37:49. (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
37:50. (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை
முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:51. அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்)
உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
37:52. (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்
படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில்
நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
37:53. ''நாம் இறந்து மண்ணாகவும்,
எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம்
உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?""
என்றும் கேட்டான்.
37:54. (அவ்வாறு கூறியவனை) ''நீங்கள் பார்க்(க
விரும்பு)கிறீர்களா?"" என்றும் கூறுவார்.
37:55. அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின்
நடுவில் பார்த்தார்.
37:56. (அவனிடம்) ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
37:57. ''என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால்,
நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில்
ஒருவனாகியிருப்பேன்.
37:58. ''(மற்றொருமுறையும்) நாம் இறந்து
விடுவோமா?
37:59. ''(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர
வேறில்லை அன்றியும், நாம் வேதனை
செய்யப்படுபவர்களும் அல்லர்"" என்று கூறுவார்.
37:60. நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
37:61. எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே
பாடுபடவேண்டும்.
37:62. அது சிறப்பான விருந்தா? அல்லது
(நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்" என்ற மரமா?
37:63. நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு
ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
37:64. மெய்யாகவே அது நரகத்தின்
அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
37:65. அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப்
போலிருக்கும்.
37:66. நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே
புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை
நிரப்பிக் கொள்வார்கள்.
37:67. பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக்
குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
37:68. அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம்
நிச்சயமாக நரகம்தான்.
37:69. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி
கேட்டிலேயே கண்டார்கள்.
37:70. ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே
இவர்களும் விரைந்தார்கள்.
37:71. இன்னும், இவர்களுக்கு முன்னரும்
அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி
கெட்டிருந்தனர்.
37:72. மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே
அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
37:73. பிறகு, அவ்வாறு அச்சமூட்டி
எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு
என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
37:74. அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான
அடியார்களைத் தவிர.
37:75. அன்றியும் நூஹ் நம்மைப்
பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு
பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
37:76. ஆகவே, நாம் அவரையும் அவருடைய
குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து
பாதுகாத்தோம்.
37:77. மேலும், அவர்களுடைய சந்ததியரை
(பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்)
நிலைத்திருக்கும்படி செய்தோம்.
37:78. மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு
(ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
37:79. ''ஸலாமுன் அலாநூஹ்"" - அகிலங்கள் எங்கும்
நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
37:80. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக
நாம் கூலி கொடுக்கிறோம்.
37:81. நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம்
நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:82. பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்)
மூழ்கடித்தோம்.
37:83. நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப்
பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.
37:84. அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய
இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு
கூர்வீராக).
37:85. அவர் தம் தந்தையையும், தம்
சமூகத்தாரையும் நோக்கி ''நீங்கள் எதனை
வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
37:86. ''அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா
நீங்கள் விரும்புகிறீர்கள்?""
37:87. ''அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம்
இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?"" (என்று
கேட்டார்.)
37:88. பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை
பார்த்தார்.
37:89. ''நிச்சயமாக நாம் நோயாளியாக
இருக்கிறேன்"" என்றும் கூறினார்.
37:90. எனவே அவரை விட்டும் அ(வருடைய
சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
37:91. அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால்
அவர் சென்று ''(உங்களுக்கு முன்
படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள்
உண்ணமாட்டீர்களா?"" என்று கூறினார்.
37:92. ''உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள்
ஏன் பேசுகிறீர்களில்லை?"" (என்றும் கேட்டார்.)
37:93. பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம்
வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
37:94. (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால்
விரைந்து வந்தார்கள்.
37:95. அவர் கூறினார்! ''நீங்களே செதுக்கிய
இவற்றையா வணங்குகிறீர்கள்?""
37:96. ''உங்களையும், நீங்கள்
செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே
படைத்திருக்கின்றான்.""
37:97. அவர்கள் கூறினார்கள்; ''இவருக்காக(ப்
பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து
எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.""
37:98. (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய
நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே
இழிவுபடுத்தி விட்டோம்.
37:99. மேலும், அவர் கூறினார்; ''நிச்சயமாக நான்
என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன்
எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.""
37:100. ''என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான
ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக"" (என்று
பிரார்த்தித்தார்).
37:101. எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு
மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய
(வயதை அடைந்த) போது அவர் கூறினார்; ''என்னருமை
மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக
நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம்
கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!"" (மகன்)
கூறினான்; ''என்னருமைத் தந்தையே! நீங்கள்
ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் -
என்னை நீங்கள் பொறுமையாளர்களில்
நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.""
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு)
முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப்
பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது
37:104. நாம் அவரை ''யா இப்றாஹீம்!""
என்றழைத்தோம்.
37:105. ''திடமாக நீர் (கண்ட) கனவை
மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை
செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி
கொடுத்திருக்கிறோம்.
37:106. ''நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்
சோதனையாகும்.""
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக்
கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.
37:108. இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு
(ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
37:109. ''ஸலாமுன் அலா இப்ராஹீம்"" (இப்ராஹீம்
மீது ஸலாம் உண்டாவதாக)!
37:110. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி
கொடுக்கிறோம்.
37:111. நிச்சயமாக அவர் முஃமின்களான நம்
(நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:112. ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை
அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம்
நன்மாராயம் கூறினோம்.
37:113. இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக்
மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும்
அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும்
இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே
பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும்
இருக்கின்றனர்.
37:114. மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும்
நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
37:115. அவ்விருவரையும், அவ்விருவருடைய
சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திருந்து
இரட்சித்தோம்.
37:116. மேலும், நாம் அவர்களுக்கு உதவி
செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி
பெற்றோரானார்கள்.
37:117. அவ்விருவருக்கும் நாம் துலக்கமான
வேதத்தைக் கொடுத்தோம்.
37:118. இன்னும், நாம் அவ்விருவருக்கும்
நேர்வழியைக் காண்பித்தோம்.
37:119. இன்னும் அவ்விருவருக்குமாகப்
பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு
வைத்தோம்;
37:120. ''ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்""
மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
37:121. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி
கொடுக்கிறொம்.
37:122. நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம்
(நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸ{ம்
முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில்
ஒருவர் தாம்.
37:124. அவர் தம் சமூகத்தவரிடம்; ''நீங்கள்
(இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?"" என்று
(போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
37:125. ''நீங்கள் படைப்பவர்களில் மிகச்
சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு" (எனும்
சிலையை) வணங்குகிறீர்களா?
37:126. ''அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும்,
உங்களுடை முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும்
ஆவான்.""
37:127. ஆனால் அவர்கள் அவரைப்
பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில்
இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு
வரப்படுவார்கள்.
37:128. அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர.
(இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
37:129. மேலும், நாம் அவருக்காகப்
பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு
வைத்தோம்;
37:130. ''ஸலாமுன் அலா இல்யாஸீன்"" இல்யாஸீன்
மீது ஸலாமுண்டாவதாக.
37:131. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக
நாம் கூலி கொடுக்கிறோம்.
37:132. நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)
அடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:133. மேலும், லூத்தும் நிச்சயமாக
முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில்
நின்றுமுள்ளவர்.
37:134. அவரையும் அவருடைய குடும்பத்தார்
யாவரையும் காத்துக் கொண்டோம் -
37:135. பின்னால் தங்கிவிட்டவர்களிடையே
இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத்
தவிர்த்து.
37:136. பின்னர் நாம் மற்றவர்களை அழித்து
விட்டோம்.
37:137. இன்னும், நீங்கள் காலை வேலைகளில்
அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து
செல்கிறீர்கள்.
37:138. இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள்.
இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?
37:139. மேலும், யூனுஸ{ம் நிச்சயமாக
முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில்
நின்றுமுள்ளவர்.
37:140. நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர்
ஒளித்தோடிய போது -
37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள்
சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர்
தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
37:142. ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான
நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு
மீன் விழுங்கிற்று.
37:143. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத்
துதிசெய்து - தஸ்பீஹ{ செய்து - கொண்டிராவிட்டால்
-
37:144. (மறுமையில் அவர்) எழுப்பப்படும்
நாள்வரை, அதன் வயிற்றிலேயே
தங்கியிருந்திருப்பார்.
37:145. ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில்,
நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி)
வெட்ட வெளியில் போட்டோம்.
37:146. அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு
சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு
செய்)தோம்.
37:147. மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது
அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
37:148. ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்.
ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை
சுகிக்;கச்செய்தோம்.
37:149. (நபியே!) அவர்களிடம் கேளும்; உம்
இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு
ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
37:150. அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா
படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
37:151. ''அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள்
தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.""
37:152. ''அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்""
(என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
37:153. (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை
விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டானா?
37:154. உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)?
எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
37:155. நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
37:156. அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம்
எதுவும் இருக்கிறதா?
37:157. நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின்,
உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
37:158. அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும்
ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை
(கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும்
(மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக்
கொண்டுவரப்படுவார்கள் என்பதை
அறிந்தேயிருக்கிறார்கள்.
37:159. எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை
விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
37:160. அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின்
அடியார்களைத் தவிர்த்து.
37:161. ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள்
வணங்குபவையும்.
37:162. (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக
நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
37:163. நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
37:164. (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;)
''குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக
எங்களில் எவருமில்லை.""
37:165. ''நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை
எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே
(நிற்கின்றோம்).
37:166. ''மேலும், நிச்சயமாக நாங்கள்
(அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹ{ செய்பவர்களாக
இருக்கிறோம்.""
37:167. (நபியே! மக்காவாசிகள் முன்னர்)
கூறிக்கொண்டிருந்தார்கள்;
37:168. ''முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு
இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள்
பெற்றிருந்தால் -
37:169. ''அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள்
நிச்சயமாக ஆகியிருப்போம்"" என்று.
37:170. ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது)
அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை)
விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
37:171. தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே
திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
37:172. (அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி
செய்யப்படுவார்கள் -
37:173. மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே
வெற்றி பெறுவார்கள்.
37:174. (ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில்
நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
37:175. (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை)
நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை)
அவர்களும் கவனிப்பார்கள்.
37:176. நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா
அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
37:177. (அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில்
இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட
அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
37:178. ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை
விட்டும் விலகியிருப்பீராக.
37:179. (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை)
நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை)
அவர்களும் கவனிப்பார்கள்.
37:180. அவர்கள் வர்ணிப்பதை விட்டும்,
கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
37:181. மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள்
மீது ஸலாம் உண்டாவதாக.
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம்
(இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
|