|
அத்தியாயம்-42
ஸ_ரத்துஷ் ஷ_றா (கலந்தாலோசித்தல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
42:1. ஹா, மீம்.
42:2. ஐன், ஸீன், காஃப்.
42:3. (நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும்,
உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும்
வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்)
மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
42:4. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன்
மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
42:5. அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து
விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின்
புகழைக் கொண்டு தஸ்பீஹ{ செய்து, உலகில்
உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்
அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும்
மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
42:6. அவனையன்றி(த் தங்களுக்கு வேறு)
பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை
அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர்
அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
42:7. அவ்வாறே நகரங்களின் தாய்க்கும்,
(மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும்
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித
சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும்
நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும்,
அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு
வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும்
ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக
அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக -
சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான்
நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில்
- நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப்
பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
42:9. (நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு)
பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால்
அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான்,
அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே
எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
42:10. நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து
வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு
அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு
வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்;
அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்;
அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே
உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால்
நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக்
கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச்
செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை
அலன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன்,
பார்ப்பவன்.
42:12. வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள்
அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே
உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான்
நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்)
சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப்
பொருட்களையும் நன்கறிந்தவன்.
42:13. நூஹ{க்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே
உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்.
ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம்
அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் ,
ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்;
''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை
நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து
விடாதீர்கள்" என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன்
பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப்
பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை
அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் -
(அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி
காட்டுகிறான்.
42:14. அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த
பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின்
காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை
(அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட
தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு
முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே
(இதற்குள்) நிச்சயமாக
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும்,
அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு
வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும்
இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
42:15. எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம்
அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக
மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன்
நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை
நீர் பின்பற்றாதீர்; இன்னும், ''அல்லாஹ் இறக்கி
வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும்
உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான்
ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்;
அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள்
எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு
எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம்
வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று
சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல
வேண்டியிருக்கிறது"" என்றும் கூறுவீராக.
42:16. எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின்,
அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ,
அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில்
பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய)
கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு
உண்டாகும்.
42:17. அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும்
உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும்
(நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக
இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
42:18. அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள்,
அதைப்பற்றி அவசரப்படுகின்றனர் ஆனால் நம்பிக்கை
கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்;
நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள்
அறிகிறார்கள்; அறிந்து கொள்க அவ்வேளை குறித்து
எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ
அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
42:19. அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு
மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு
(வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்;
(யாவரையும்) மிகைத்தவன்.
42:20. எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ
அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக
அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை
மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம்
அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும்
அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
42:21. அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை
மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள்
அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில்
விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும்
என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு
இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில்
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக
அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை
உண்டு.
42:22. (அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள்
சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து
கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது
அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான்
கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ
அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில்
இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய
இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும்
பாக்கியமாகும்.
42:23. ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள்
செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ்
நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர்
கூறும்; ''உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத்
தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும்
கேட்கவில்லை!"" அன்றியும், எவர் ஒரு நன்மை
செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல)
நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ்
மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக்
கொள்பவனாகவும் இருக்கின்றான்.
42:24. அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; ''அவர்
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக்
கூறுகிறார்"" என்று சொல்கிறார்களா? அல்லாஹ்
நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது
முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ்
பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை
உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக
நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
42:25. அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ
மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்;
(அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும்,
நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
42:26. அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல)
அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று
அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்;
இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான
வேதனையுண்டு.
42:27. அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு
(மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள்
பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு
விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு
கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன்
அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று
நோக்குபவன்.
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மறையை இறக்கி
வைப்பவன் அவனே மேலும் அவன் தன் ரஹ்மத்தை
(அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே
புகழுக்குரிய பாதுகாவலன்.
42:29. வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள்
(முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும்,
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே,
அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க
பேராற்றலுடையவன்.
42:30. அன்றியும் தீங்கு வந்து உங்களை
அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த
(காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை
அவன் மன்னித்தருள்கின்றான்.
42:31. இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம்
புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை
மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர,
பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
42:32. இன்னும், மலைகளைப் போல் கடலில்
செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்.
42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்)
அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்)
மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக
இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர்
யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
42:34. அல்லது அவர்கள் சம்பாதித்த காரணத்தினால்
அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்;
மேலும் அவன் பெரும்பாலானவற்றை
மன்னித்தருளுகிறான்.
42:35. அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித்
தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு
(தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை
அறிவார்கள்.
42:36. ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப்
பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப)
சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே
முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு,
அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும்
நிலையானதுமாகும்.
42:37. அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும்
பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக்
கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும்
மன்னிப்பார்கள்.
42:38. இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று
தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் -
அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே
கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம்
அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்)
செலவு செய்வார்கள்.
42:39. அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம்
செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க
முறையில்) பழி தீர்ப்பார்கள்.
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற
தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச்
சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி
அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன்
அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
42:41. எனவே, எவரொருவர் அநியாயம்
செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி
தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது
(குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம்
செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம்
செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம்
சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை
செய்யும் வேதனையுண்டு.
42:43. ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்)
பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால்,
நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள)
செயலாகும்.
42:44. ''இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப்
பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள்
வேதனையைக் காணும் போது (இதிலிருந்து) தப்பித்து
மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?"" என்று கூறும்
நிலையை நீர் காண்பீர்.
42:45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை
கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்) கடைக்ககண்ணால்
பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்)
கொண்டவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை)
ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; ''எவர்
தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை
தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக
அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்."" அறிந்து
கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான
வேதனையில் இருப்பார்கள்.
42:46. (அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு
உதவிபுரியும் உபகாரிகளில் எவரும்
இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை
வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு
வேறுவழியொன்றுமில்லை.
42:47. அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல
போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன்,
உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் -
அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும்
இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும்
முடியாது.
42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து
விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை
அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச்
செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான்
உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக
நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள்
சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள்
மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள்
முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால்
அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக
மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக
இருக்கின்றான்.
42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும்
பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான்
விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான்
விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்;
மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை
அளிக்கின்றான்.
42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும்,
பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்;
அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும்
செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்;
பேராற்றலுடையவன்.
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ
அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான்
விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை
அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி
(நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன்
உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய
கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக
உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்)
வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர்
அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை
ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம்
விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி
காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான
பதையில் வழி காண்பிக்கின்றீர்.
42:53. (அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்;
வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும்
(யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க!
அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு
வருகின்றன.
|