|
அத்தியாயம்-51
ஸ_ரத்து(த்) தாரியாத் (புழுதியைக் கிளப்பும்
காற்றுகள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
51:1. (புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும்
(காற்றுகள்) மீது சத்தியமாக!
51:2. (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின்
மீதும்,
51:3. பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின்
மீதும்,
51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை
அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும்
சத்தியமாக
51:5. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்
படுவதெல்லாம் உண்மையேயாகும்.
51:6. அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி
வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
51:8. நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட
பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
51:9. அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன்
(இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
51:11.அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால்
மறதியில் இருக்கின்றனர்.
51:12. (நன்மை, தீமைக்குக்) ''கூலி கொடுக்கும்
நாள் எப்போது வரும்?"" என்று அவர்கள்
கேட்கின்றனர்.
51:13. நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும்
நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
51:14. ''உங்களுடைய சோதனையைச் சுவைத்துப்
பாருங்கள்,"" எதனை நீங்கள் அவசரப்படுத்திக்
கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
51:15. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள்,
(சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும்
இருப்பார்கள்.
51:16. அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு
அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்;
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை
செய்வோராகவே இருந்தனர்.
51:17. அவர்கள் இரவில் மிகவும் சொற்ப
நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
51:18. அவர்கள் விடியற் காலங்களில்
(பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக்
கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:19. அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும்,
வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
51:20. உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு
பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:21. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள்
இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க
வேண்டாமா?
51:22. அன்றியும் வானத்தில் உங்கள் உணவும்,
(மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும்
இருக்கின்றன.
51:23. ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன்
மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது
உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது
பிரத்தியட்சமான உண்மையாகும்.
51:24. இப்றாஹீமின் கண்ணியம் மிக்க
விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
51:25. அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை
நோக்கி; ''உங்களுக்கு) ''ஸலாம்" என்று
கூறினார்கள்; (அதற்கவர்), ''(உங்களுக்கு)
''ஸலாம்"" என்று கூறினார். ''இவர்கள் (நமக்கு)
அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே""
என்று எண்ணிக் கொண்டார்).
51:26. எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம்
விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப்
பொறித்துக்) கொண்டு வந்தார்.
51:27. அதை அவர்கள் முன் வைத்து, ''நீங்கள்
புசிக்க மாட்டீர்களா?"" என்று கூறினார்.
51:28. (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு
இவர்களைப் பற்றி உள்@ர ஓர் அச்சம் ஏற்படடது,
''(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!"" எனக்
கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க
புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
51:29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார்
சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம்
முகத்தில் அடித்துக் கொண்டு ''நான் மலட்டுக்
கிழவியாயிற்றே!"" என்று கூறினார்.
51:30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;)
''இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன்
ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்""
என்று கூறினார்கள்.
51:31. (பின்னர் இப்றாஹீம்;) ''தூதர்களே!
உங்களுடைய காரியம் என்ன?"" என்று வினவினார்.
51:32. ''குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால்
நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்""
என்று அவர்கள் கூறினார்கள்.
51:33. ''அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை
எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
51:34. ''வரம்பு மீறியவர்களுக்காக உங்கள்
இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.""
51:35. ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை
(முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
51:36. எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு
வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
51:37. நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே
அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு
வைத்தோம்.
51:38.மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர்
அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான
ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது
51:39. அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள்
ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்)
புறக்கணித்து; ''இவர் ஒரு சூனியக்காரர், அல்லது
பைத்தியக்காரர்"" என்று கூறினான்.
51:40. ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும்
பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன்
நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
51:41. இன்னும், 'ஆது" (சமூகத்தாரிலும் ஒரு
படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது
(நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை
அனுப்பியN போது
51:42.அ(க்காற்றான)து தன் எதிரில்
பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
51:43. மேலும் 'ஸமூது" (சமூகத்தாரிலும் ஒரு
படிப்பினை இருக்கிறது); ''ஒரு காலம் சுகம்
அனுபவியுங்கள்"" என்று அவர்களுக்குக்
கூறப்பட்டபோது
51:44. அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை
மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற)
பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக்
கொண்டது.
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி
பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக்
கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
51:46. அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹ{டைய
சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக
அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே
இருந்தார்கள்.
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக்
கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம்
விரிவாற்றலுடையவராவோம்.
51:48. இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்;
எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே
மேம்பாடுடையோம்.
51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு
பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக
நாம் படைத்தோம்.
51:50. ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து
செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து
உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர்
கூறுவீராக).
51:51. மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை
(இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான்
அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன்
(என்றும் கூறும்).
51:52. இவ்வாறே, இவர்களுக்கு
முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து
ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை)
சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று
கூறாமல் இருந்ததில்லை.
51:53. இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம்
தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள்
அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
51:54. ஆகவே (நபியே!) நீர் அவர்களைப்
புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர்
விலகிவிடுவீராயின் அதற்காக) நீர்
பழிக்கப்படமாட்டீர்.
51:55. மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக!
ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு
நற்பயனளிக்கும்.
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும்
அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான்
படைக்கவில்லை.
51:57. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான்
விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க
வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக்
கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
51:59. எனவே, அநியாயம் செய்து
கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு
வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு
பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக)
அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
51:60. ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
|