|
அத்தியாயம்-72
ஸ_ரத்துல் ஜின்னு (ஜின்கள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
72:1. நிச்சயமாக, ஜின்களில் சில (திருக்
குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம்
கூறினர்) ''நிச்சயமாக நாங்கள், மிகவும்
ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்"" என்று
கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று
(நபியே!) நீர் கூறுவீராக.
72:2. ''அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது,
ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்;
அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள்
இணையாக்கமாட்டோம்"" (என்று அந்த ஜின்
கூறலாயிற்று).
72:3. ''மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை
நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்)
மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
72:4. ''ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்)
அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக்
கொண்டிருக்கின்றனர்.
72:5. மேலும் ''மனிதர்களும் ஜின்களும்
அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்""
என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
72:6. ''ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள
ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள்
சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால்
அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை
பெருக்கிவிட்டனர்.
72:7. ''இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள்
எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும்
(மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று
எண்ணிக் கொண்டு இருந்தனர்.
72:8. ''நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப்
பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும்,
தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை,
நாங்கள் கண்டோம்.
72:9. ''(முன்னர் வானில் பேசப்படுவதைச்)
செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில்
நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன்
அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக்
காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.
72:10. ''அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத்
தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய
இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா
என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
72:11. ''மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும்
இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில்
இருக்கின்றனர், நாம் பல்வேறு
வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
72:12. ''அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில்
அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை
விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை
(எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம்
அறிந்து கொண்டோம்.
72:13. ''இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை
(குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது
ஈமான் கொண்டோம்."" எனவே எவன் தன் இறைவன் மீது
ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும்,
அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
72:14. ''இன்னும், நிச்சயமாக, நம்மில்
முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில்
அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள்
முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம்
நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
72:15. ''அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி
விறகாய் விட்டனர்"" (என்று அந்த ஜின் கூறிற்று).
72:16. ''(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்)
வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால்,
நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத்
தண்ணீர் புகட்டுவோம்.
72:17. ''அதைக் கொண்டு நாம் அவர்களைச்
சோதிப்பதற்காக, ஆகவே, எவன் தன் இறைவனை
நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய
வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
72:18. ''அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள்
அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்)
அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள்
பிரார்த்திக்காதீர்கள்.
72:19. ''மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்
அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால்
அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து)
நெருங்கிவிடுகின்றனர்.""
72:20. (நபியே!) நீர் கூறும்; ''நான்
பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்;
அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க
மாட்டேன்.""
72:21. கூறுவீராக, ''நிச்சயமாக நான் உங்களுக்கு
நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.""
72:22. கூறுவீராக, ''நிச்சயமாக அல்லாஹ்வை
விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்;
இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான்
காணமுடியாது.
72:23. ''அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச்
சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர
(எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு
நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர்
என்றென்றும் இருப்பர்"" என (நபியே!) நீர்
கூறும்.
72:24. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை
(வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய
உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்,
எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும்
விரைவில் அறிந்து கொள்வார்கள்.
72:25. (நபியே!) நீர் கூறும், ''உங்களுக்கு
வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா,
அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை
ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
72:26. ''(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்;
எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும்
வெளியாக்கமாட்டான்.
72:27. ''தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத்
தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப்
பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக
நடத்தாட்டுகிறான்.
72:28. ''தங்களுடைய இறைவனின் தூதுத்துவச்
செய்திகளை, திட்டமாக எடுத்துச்
சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும்
அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து
கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும்
எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.""
|