ஆத்மாவும் சைத்திய புருஷனும்
அன்னையின் ஆன்மீக அனுபவம்
நீங்கள் ஆன்மிக அனுபவம் பற்றிப் பேசுகிறீர்கள். ஆன்ம அனுபவம் என்றால் என்ன, அதைப்
பெறுவது எப்படி?
நீ வழக்கமாகப் பெற்றிருக்கும் உணர்வைவிட உயர்ந்ததோர் உணர்வுடன் உனக்குத் தொடர்பு
உண்டாக்குவதற்கு ஆன்மிக அனுபவம் என்று பெயர். உன்னைப் பற்றி உனக்கு ஓர் உணர்வு
உள்ளது, அதை நீ உணர்வதுகூட இல்லை அதுதான் உனக்கு உன்னுடைய வழக்கமான நிலை. இப்பொழுது,
திடீரென உன்னுள்ளே வழக்கமான இந்த நிலையைவிட முற்றிலும் வேறுபட்ட, மிகவும் உயர்ந்த
ஒன்றை உணர்வாயானால் - அது எதுவாக இருந்தாலும் சரி - அது ஓர் ஆன்மிக அனுபவம் ஆகும்.
நீ அதற்கு ஒரு கருத்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலிருக்கலாம்; நீ அதற்கு ஒரு
விளக்கம் கொடுத்துக்கொள்ளலாம் அல்லது கொடுக்காமலிருக்கலாம் அது நீடித்து நிற்கலாம்
அல்லது கணநேரத்தில் மறைந்து விடலாம். எப்படியிருந்தபோதிலும், உணர்வில் இந்த
முக்கியமான வேறுபாடு இருக்குமானால், அதன் தன்மை சாதாரணமாக உனக்குள்ள உணர்வின்
தன்மையைவிட மிக உயர்ந்ததாக, தெளிவானதாக, தூயதாக இருக்குமானால், அப்பொழுது அதை ஓர்
ஆன்மிக அனுபவம் எனக் கூறலாம். இதிலிருந்து எத்தனையோ ஆயிரம் வகை அனுபவங்களை ஆன்மிக
அனுபவங்கள் என அழைக்கலாம் என்பது தெரிகிறது.
ஆன்மிக அனுபவம் பெறவேண்டும் என ஆர்வமுற வேண்டுமா?
முன்னேற வேண்டும், அதிக உணர்வு பெற வேண்டும், மேலும் நல்லவனாக வேண்டும், நன்றாகச்
செயல்பட வேண்டும் என ஆர்வமுறுவதைவிட அறிவுடைய செயலாகும்... ஆன்மிக அனுபவம்
வேண்டுமென ஆர்வமுறும்போது தோற்றத்தில் பெரும் சிறிதளவோ பெரிய அளவிலோ கற்பனையான,
பொய்யாக்கப்பட்ட அனுபவங்களுக்கு அது கதவு திறக்கலாம், உயர் விஷயங்களின் தோற்றம்
எடுத்துவரும் பிராண இயக்கங்களுக்குக் கதவு திறக்கலாம். அனுபவங்களுக்காக
ஆர்வமுறும்போது ஒருவன் தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளக்கூடும். உண்மையில் அனுபவம் உள்
வளர்ச்சி காரணமாகத் தன்னியல்பாய் வரவேண்டும்; அனுபவத்திற்காக அனுபவம் என்றிருக்கக்
கூடாது.
சொற்பின்னலிலிருந்து வெளியே வா
இதில் பெரியதொல்லை என்னவென்றால நீ சொற்களைக் கொண்டு சிந்திக்கிறாய்; ஆனால் இந்தச்
சொற்களெல்லாம் பொருளற்ற வெற்றுச்சொற்களே - நீ இறைவன் என்றும், பரம்பொருள் என்றும்,
யோகம் என்றும், இன்னும் எவற்றைப் பற்றியெல்லாமோ பேசுகிறாய்; ஆனால் அவற்றைப் பற்றி
உன் மூளையில் தெளிவான பொருள் ஏதும் உண்டா? ஒரு சிந்தனை, ஓர் உணர்ச்சி, தெளிவான ஒரு
கருத்து, ஓர் அனுபவம் இவற்றில் எதையாவது அவை குறிக்கின்றனவா? இல்லை, அவை வெறும்
சொற்கள்தாமா?
.... அசல் பொருளை, சொற்களுக்குப் பின்னாலுள்ள அனுபவத்தை நீ பார்க்க வேண்டும். இங்கு
நாம் ''யோகம்'' என்று சொல்கிறோம்; இன்னும் சில இடங்களில் வேறுவிதமாகப் பேசலாம்.
சிலர், ''நான் எனது தோற்றத்தின் மூல காரணத்தைத் தேடுகிறேன்'' என்று சொல்லலாம்.
இப்படியே பலரும் பலவிதமாகப் பேசலாம். மதச்சார்பு உடையவர்கள், ''நான் தெய்வ
சாநித்தியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன்'' என்று சொல்லக்கூடும். ஒரே விஷயத்தை
ஐம்பது விதமாகச் சொல்லலாம், ஆனால் விஷயம்தான் முக்கியம். அதை உன்னுடைய மூளையிலும்,
உன்னுடைய இதயத்திலும், எல்லா இடத்திலும் நீ உணரவேண்டும். இல்லையெனில் உன்னால்
முன்னேற முடியாது. நீ சொற்களில் பின்னலிலிருந்து வெளிவந்து செயலில் இறங்கவேண்டும் -
அனுபவத்தில் இறங்கவேண்டும், வாழ்க்கையில் இறங்கவேண்டும்.
''அதனுடன்'' தொடர்பு கொள்ளுதல்
ஒரு பொருள் உள்ளது, மனித மொழிகளால் விளக்கிக் கூற முடியாத ஓர் உண்மைப்பொருள் உள்ளது,
விளக்கிக் கூறமுடியாவிட்டாலும் ஓர் அகச் சாதனை மூலம் அதனுடன் நம்மால் தொடர்புகொள்ள
முடியும், அதனுடன் நாம் ஒன்றாகிவிட முடியும். அதனுடன் ஒன்றிவிட்டபோது அது
எப்படிப்பட்டது என்பதை அறிவோம். ஆனால் அதை விளக்கிச் சொல்லமுடியாது, அதை வருணிக்க
முடியாது.
ஒருவகைச் சொற்களைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டிருந்தால், உன் மனத்தில் ஒருவகைக்
கொள்கை அல்லது நம்பிக்கை இருந்தால் அந்தக் கொள்கை அல்லது நம்பிக்கைக்கு ஏற்றபடி
உன்னுடைய சொற்களும் வருணனையும் அமையும். வேறு வகையாகப் பேசிப்பழகிய கூட்டத்தைச்
சேர்ந்தவனாக நீ இருந்தால் நீ அதை வருணிப்பதும், அதைப் பற்றிச் சிந்திப்பதும் கூட
அந்த வகையாகவே இருக்கும்.
நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால். ஓர் உண்மை உள்ளது, அதை உன்னுடைய மனத்தினால்
புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அது இருக்கிறது. நீ அதை என்ன பெயரிட்டு அழைக்கிறாய்
என்பது சிறிதும் முக்கியம் அன்று அது உள்ளது, அது ஒன்றுதான் நமக்கு முக்கியம். ஆகவே,
நாம் செய்ய வேண்டியது அதற்கு ஒரு பெயர் கொடுப்பதன்று, அதனுடன் தொடர்பு கொள்வதே நாம்
செய்யவேண்டியது. உண்மையில் அதற்கு ஒரு பெயர் சூட்டுவதிலோ, தொடர்புகொள்ள முயலவேண்டும்,
அதன்மீது ஒருமுகப்படவேண்டும். அதில் அந்த உண்மையில், வாழவேண்டும், அதில் வாழும்
அனுபவம் உனக்குக் கிடைத்துவிட்டால் அதை என்ன பெயர் சொல்லி அழைக்கிறாய் என்பதற்கு
எவ்வித முக்கியத்துவமும் இல்லை; அந்த அனுபவம் ஒன்றே முக்கியம். அந்த அனுபவத்தை ஒரு
குறிப்பிட்ட விளக்கத்துடன் குறுகிய முறையில் தொடர்புறுத்தும்போது அது தாழ்வான
ஒன்றாகிறது.
எல்லா வழிகளின் மூலமாகவும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உன்னால் அதில் வாழமுடிய
வேண்டும்; ஏனெனில், அதுவே உண்மையானது, மிக உயர்ந்த நன்மையானது, எல்லாம் வல்லது,
எல்லாம் அறிவது.
ஆம், இதில் நீ வாழமுடியும், ஆனால் அதைப்பற்றிப் பேச முடியாது. அதைப் பற்றி நீ
பேசினாலும் அந்தப் பேச்சுக்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் கிடையாது. எத்தனையோ
தத்துவ சாஸ்திர அறிஞர்கள் கடவுள் என்னும் கருத்தை விட்டுவிட்டு அதற்குப்பதிலாக
எதனுடனும் தொடர்பில்லாத தனிப்பொருள், பேருண்மை, நீதி, முடிவே இல்லாத முன்னேற்றம்
என்றெல்லாம் அந்தக் கருத்தை விளக்க முயலுகின்றனர். ஆனால் தன்னை அதனுடன்
ஐக்கியப்படுத்திக்கொள்ளும் சக்திபடைத்தவனுக்கு அதைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது
என்பதெல்லாம் முக்கியமே அல்ல.
சிலசமயம் ஒருவன் ஒரு புத்தகத்தில் ஒரு வாக்கியத்தைப் படிக்கிறான், அது அவனை அங்கே
அழைத்துச் சென்றுவிடுகிறது. சில சமயம் ஒருவன் தத்துவ நூல்கள், சமய நூல்கள் பலவற்றைப்
படிக்கிறான், அதனால் ஒரு பயனும் உண்டாகக் காணோம். ஆனால் சிலருக்குத் தத்துவ
நூல்களைப் படிப்பது முன்னேற உதவியாக இருக்கவும் செய்கிறது. ஆனால் அவையெல்லாம்
இரண்டாம் பட்சமானவையே. ஒன்றே ஒன்றுதான் முக்கியமானது. நேர்மையுள்ள, நிலையான
சோர்வுபடாத சங்கற்பம்- ஆம் சோர்வுபடாத சங்கற்பம் வேண்டும். ஏனெனில் இவை கண்
இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும் காரியங்கள் அல்ல.
ஆகவே விடாமுயற்சி தேவை. முன்னேற்றம் அடையாதது போல் தோன்றினாலும் சோர்வடைந்துவிடக்
கூடாது. தன்னுடைய இயற்கையிலுள்ள எது எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதை அறிந்து,
அதன்மேல், வேண்டிய முன்னேற்றத்தை அடையும் வழியில் செல்லவேண்டும். திடீரென்று ஒருநாள்
முன்னேற்றம் ஏற்படும், பாதையின் முடிவில் அனுபவம் பெறுவாய்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், முற்றிலும் வேறுபட்ட பாதையில் சென்றவர்கள்,
முற்றிலும் வேறுபட்ட கோட்பாடுகள் உடையவர்கள், கடவுள்மீது மிக அழுத்தமான நம்பிக்கை
உடையவர்கள், கடவுள் இருக்கிறார் என்பதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லாதவர்கள்,
சடவாதிகள்கூட, அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர். எல்லாருடைய அனுபவமும் ஒன்றாகவே
இருந்திருக்கிறது. காரணம்: அதுவே உண்மை, அதுவே உள்பொருள், அதைத் தவிர வேறொரு பொருள்
இல்லை.
''அது'' என்று சொல்வதைத் தவிர அதைப்பற்றி வேறு எதுவும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.
அதைப் பற்றி எப்படிப் பேசுகிறோம் என்பது முக்கியமன்று, அதை அடையும் வழியில் - உனது
சொந்த வழியில், அது எந்த வழியாக இருந்தாலும் சரி - சென்று அதை அடையவேண்டும். அது
ஒன்றே முக்கியம்.