ஜென் மொழி

சிக்கல்

குருஜி வாசுதேவ்



புத்தர் பெருமானின் சீடர்கள் அவரைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.

எப்போதும் போலப் புத்தர் வந்தார். அது காலை நேரம். அவர் தமது கையில் ஒரு சிறிய துணியை ஏந்தி வந்தார்.

வந்ததும் சிறிய மேடையின் மீது அமர்ந்தார். தமது கையிலுள்ள துணியைப் பிரித்தார். அது ஒரு துண்டு அளவுக்குப் பெரியதும் அல்ல. அதே சமயம் மிகச் சிறியதும் அல்ல. ஒரு சின்னஞ்சிறிய குழந்தைகைக்குச் சுற்றும் அளவுக்கு அது சிறியதாயிருந்தது.

இதை வைத்து இன்று ஏதோ ஒரு பாடம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து சீடர்கள் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

புத்தர் பெருமான் தலைநிமிராமல் அந்தத் துணியில் முடிச்சுக்களைப் போட ஆரம்பித்தார். ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுக்களைப் போட்ட புத்தர் தலை நிமிர்ந்து தன் சீடர்களையே சற்று நேரம் பார்த்தார். பிறகு பேசினார்.

''இதோ இந்தத் துணியைப் பாருங்கள். இது நான் கொண்டு வந்தது. இதில் நான் ஐந்து முடிச்சுக்களைப் போட்டிருக்கிறேன். இப்போது நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தத் துணி முன்பிருந்த அதே துணிதானா? அதே துணிதான் என்றால் இதில் முடிச்சுக்கள் இருப்பதும், இல்லாததும் ஒன்றுதானா?''

புத்தரின் சீடர்களில் ஒருவனான ஆனந்தன் எழுந்தான்.


''பெருமானே! இரண்டும், ஒரே துணிதான். முடிச்சுக்கள் இல்லாத துணி எதுவோ அதுவே முடிச்சுக்கள் போட்ட நிலையிலும் தொடர்கிறது. முன்பு முடிச்சுக்கள் இல்லை. குழந்தை, மனம்போல் நிர்மலமாயிருந்தது. இந்த முடிச்சுக்கள் பந்தபாசங்களில் உழலும் மனம்போல் அதனைக் களங்கப்படுத்தியுள்ளன. அவ்வளவே!''

''சரியாகச் சொன்னாய், ஆனந்தா. எல்லா ஜீவன்களின் மனமும் இயல்பிலேயே தெய்வத்தன்மை உள்ளனவாம். எல்லோருமே ஒரு வகையில் புத்தர்களே! ஆசை, பாசம் போன்ற பல முடிச்சுக்களில் சிக்கி, சிக்கல்களின் விளைவாகத் தனிமைப்பட்டுத் தன்னிலிருந்தே தான் ஒதுங்கி விரும்பியும் விரும்பாமலும் பல செயல்களைச் செய்து ஒவ்வொருவரும் தனித்தனி உலகமாகி ஒவ்வொரு மனமும் உணர்ச்சிக் கடலாகி அந்த அலைகளிலேயே அடித்துக் கொண்டு போகப்படுகிறோம்.''

சற்று நேரம் மவுனமாயிருந்த புத்தர், ''சரி. முடிச்சுக்களைப் பார்த்தீர்கள். இனி இந்த முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும். அது எப்படி?'' என்றார்.

புத்தரின் மற்றொரு சீடரான சாரிபுத்தன் எழுந்தான்.

''சுவாமி! சிக்கலை அவிழ்க்க வேண்டும் என்றால் முதலில் அதன் அருகில் போக வேண்டும். அந்த முடிச்சுக்கள் எந்த விதமாகப் போடப்பட்டு உள்ளன என்பதை உணரவேண்டும். அது இல்லாமல் அதை அவிழ்ப்பது எளிதல்ல. ஒரு முடிச்சுப் போடப்பட்ட விதம் எப்படியோ அதே விதத்தில்தான் அதை அவிழ்க்க வேண்டும். அப்போதுதான் துணி பாதிக்கப்படாமல் அவிழ்க்க முடியும். வேகமாகச் செய்யும் பிரயோகம் முடிச்சை இறுக்குவது மட்டுமல்லாமல் துணியையும் கூடக் கிழித்து விடும்.''

சாரிபுத்தன் சொன்னது கேட்டுத் தலையசைத்தார் புத்தர்.

''உண்மை. துணி முடிச்சுக்கள் கண்ணுக்குப் புலப்படும். மனமுடிச்சுக்கள் புலனாவதில்லை. மனதை நெருங்கிப் பார்த்துச் சிக்கல்களை உணராதவரை வாழ்வின் முடிச்சுக்களை அவிழ்க்க இயலாது!'' என்றார் புத்தர்.