ஜென் மொழி

அவரவர்க்கு அவரவரே!

குருஜி வாசுதேவ்





பிரபு ஒருவருக்கு ஞான தாகம் ஏற்பட்டது.

பல மதங்களையும், சடங்குகளையும், பல தத்துவங்களையும் விரிவாக அலசினார்.

உருவ வழிபாடு, அருவ வழிபாடு, வேள்வி, யாகம் இவற்றை விளங்கிக் கொள்ளப் பல வழிகள் இருந்தன. 'ஜென்' தத்துவம் பற்றி மட்டும் சரிவர எதிலும் விளக்கமில்லை.

ஒரு ஜென் குருவை நாடி விளக்கம் பெறுவதென்று முடிவு செய்தவர் அதன்படி தீர விசாரித்து ஒரு குருவை அடைந்தார்.

குரு அப்போது வெறுமனே அமர்ந்து கொண்டு இருந்தார்.

வந்தவர் வணங்கினார். ''குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது. ஆகவே அதனை விளக்கமாகச் சொல்ல வேண்டும்!'' என்றார்.

குரு ஆரம்பித்தார். ''ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா?'' என்றவர், ''போய்ச் சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி விட்டு உட்புறம் சென்று விட்டார்.

வந்தவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அவரவர் வாழ்வு என்பது அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி விட முடியாது.

ஞானம் என்பது உபதேசங்களால் வருவது இல்லை. விழிப்புணர்வை எவரும் சடங்குகளால் பெறுவதில்லை.

தன் வாழ்வைத் தானே வாழ்வதன் மூலம் அனுபவம் பெறமுடியுமே தவிர, பிறர் அனுபவங்களை நாம் உய்த்துணர முடியாது.