திருவள்ளுவர்

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
காணாதபோது இகழ்ந்து பேசுவார்கள். கண்டவிடத்துப் போலித்தனமாக மகிழ்ந்து
உரையாடுவார்கள். இவ்வாறு புறங்கூறிப் போலி வாழ்க்கை வாழ்வதைவிட இறந்து போதல், தர்ம
நூல்களில் சொல்லப்பட்ட பயனைக் கொடுக்கும்.
புறங்கூறுகின்ற குணத்தை மிகக் கேவலமான குணமாக வள்ளுவர் சித்திரிக்கிறார். ஒருவன்
இல்லாத போது அவனைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவார்கள். அவனை நேரில் கண்டுவிட்டாலோ,
கூனிக் குறுகி, குழைந்து, புகழ்ந்து பேசுவார்கள்.
இதைவிடக் கேவலமான நிலைக்கு மனிதன் தாழ்ந்து போக முடியாது. அவ்வாறு தன்னைத்தானே
கேவலப்படுத்திக் கொள்ளுவதைவிட ஒருவன் தன்னுடைய உயிரை விட்டுவிடுவானேயானால், அந்த
மரணத்தின் விளைவாகத் தர்ம நூல்களில் சொல்லப்பட்டுள்ள பயன்கள் அவனுக்குக் கிடைக்கும்.
புறங்கூறித் தான் உயிர் வாழ வேணடுமென்றால் அவ்வாறு உயிர் வாழ்வதைவிடச் சாவது எவ்வளவோ
மேல். ஏனெனில், புறங்கூற மறுத்து உயிரை விடுகின்றவன் நல்ல கொள்கைக்காக உயிரை
விடுவதால் தர்மத்தின், பயன் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும்.