திருவள்ளுவர்
![]() |
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
தன்னுடைய காது வெறுக்கும்படியாகக் கூறப்படும் சொற்களையும் பொறுத்துக்கொள்ளும்
குணமுடைய அரசனின் குடை நிழலின்கீழ் உலகம் நிலைத்திருக்கும்.
இந்தக் குறளில் மிக உயர்ந்த ஜனநாயகப் பண்பை வள்ளுவர் உணர்த்துகிறார். மன்னன்
அதிகாரம் பெற்றவனாக இருப்பதால் அவனிடம் சலுகைகளைப் பெற விரும்புவோர் அவன் மனம்
குளிரும்படியாகப் பேச வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
எதைச் சொன்னால் அவனுக்குப் பிடிக்குமோ அதையே சொல்லத் தொடங்குவார்கள். இதற்குப்
பழகிப்போகின்ற மன்னனின் செவிகளுக்கு உண்மை எட்டாது. இதனால் தவறான தகவல்களையே அவன்
பெற நேரிடும்.
தான் வெறுக்கும்படியான சொற்களைப் பிறர் கூறினாலும் அதைப் பொறுத்துக்கொள்ளும் இயல்பு
மன்னனுக்கு இருக்குமடாகில், உண்மைகளை எல்லோரும் பயமின்றி அவனிடம் எடுத்துச்
சொல்லுவார்கள். அப்போது உண்மை நிலை அவனுக்குப் புரியும். மக்களுக்கும் அவனிடத்தில்
அழுத்தமான நம்பிக்கை ஏற்படும்.
வெறுக்கும்படியான சொற்களையும் பொறுமையாகக் கேட்கும் மன்னனிடம் மக்கள்
நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருப்பார்கள்.