திருவள்ளுவர்
![]() |
எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
பிறருக்குச் சொல்லுகின்ற போது அவர்களுடைய மனதில் எளிதில் பதியும்படியாகச் சொல்ல
வேண்டும்.
பிறருடைய வாயில் இருந்து வரும் அரிய கருத்துக்களையும் எளிமையாக்கிப் புரிந்துகொள்ள
வேண்டும்.
இதுவே அறிவு என்று அழைக்கப்படும்.
அறிவின் தன்மையாக வள்ளுவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, பிறருக்கு
எளிதில் விளங்கும்படி சொல்லுவது; இன்னொன்று, பிறர் சொல்லும் கடினமான விஷயங்களையும்
சுலபத்தில் புரிந்துகொள்ளுவது.
மேலை நாட்டுத் தத்துவஞானி ஒருவர் தத்துவத்துக்கு இலக்கணம் சொல்லும் போது, கடினமான
விஷயங்களை எளிமையாக்கிக் காட்டுவது என்றார்.
அறிவின் வேலையும் அதுதான். நாம் உயர்ந்த, சிக்கலான விஷயங்களை எடுத்துச் சொல்லும்
போது, கேட்கின்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமைப்படுத்திச் சொல்லவேண்டும்.
அதே சமயம், உயர்ந்த சிக்கலான விஷயங்களைப் பிறர் எந்த நிலையிலிருந்து சொன்னாலும்
அதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் வேண்டும். இதிலிருந்து பெறப்படுவது என்ன?
கடினமான விஷயங்களை வாங்கிக்கொள்ளும் ஆற்றல், அறிவுக்கு இருக்கவேண்டும். அதே சமயம்,
அந்தக் கடினமான விஷயங்களைப் பிறருக்கு எளிமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கும்
திறமையும் இருக்க வேண்டும். அதுவே அறிவு.