திருவள்ளுவர்

 



அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.

போர்க்களத்தில் தள்ளிவிட்டு ஓடுகின்ற முட்டாள்தனமான குதிரையைப் போன்றவரின் நட்பைவிடத் தனித்திருப்பது தலைசிறந்ததாகும்.

குதிரைமீது ஏறிப் போருக்குச் செல்லுகிறான். ஆனால், போர்க்களத்தில் குதிரை இவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது. அப்போது இவனுடைய நிலைமை என்ன? சுலபத்தில் எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகிப் போவான்.

அதைப் போலச் சில நண்பர்கள் தங்களை நம்பி வருகின்றவர்களை நட்டாற்றில் கைவிட்டு ஓடிப் போவார்கள். போர்க் களத்தில் கீழே தள்ளி விட்டு ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்கள் இவர்கள்.

ஆபத்தில் கைவிட்டுவிட்டு ஓடிவிடும் இந்த நண்பர்களைப் பெற்று இருப்பதைவிட ஒருவன் நண்பர்களின் துணி இல்லாமல் தனித்திருப்பதே நல்லது. ஏனெனில், தனித்திருந்தால் மற்றவர்மீது பொய்யான நம்பிக்கை வைக்காமல் பாதுகாப்போடு இருக்க முடியும்.

துணை இருக்கின்றவர்களே நண்பர்கள். ஆபத்தில் ஓடி விடுகின்றவர்கள் நண்பர்கள் ஆக மாட்டார்கள். அதனால், ஆபத்தில் கைவிடுவோர் நட்பைவிடத் தனிமையே சிறந்தது.